மகனுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி


மகனுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 Oct 2019 4:45 AM IST (Updated: 1 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

மகனுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் பலர் வந்து கொண்டே இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களை சோதனையிட்ட பிறகு உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இந்த நிலையில் பகல் 11 மணிஅளவில் ஒரு பெண் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் அலுவலகத்துக்கு முன்பு பெருந்துறை ரோட்டில் நின்றுகொண்டு, மண்எண்ணெய் கேனை எடுத்தார். உடனே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி, தீ வைக்க முயன்றார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள். பின்னர் அந்த பெண்ணை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர், நம்பியூர் காளியம்மன் நகரை சேர்ந்த முபாரக்கின் மனைவி அம்புரோஜ்பேகம் (வயது 50) என்பதும், அவர்களுக்கு 2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதில் மூத்த மகனான சையதுமுஸ்தபா என்கிற அப்பாஸ் (27) பி.ஈ ஏரோநாட்டிக்கல் படித்து முடித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக வேலை தேடி வருகிறார். மேலும், தனது மகனுக்கு வேலை கிடைக்காமல் இருக்க சிலர் சதி வேலை செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு கொடுத்து உள்ளார்.

மகனுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் அம்புரோஜ்பேகம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து அம்புரோஜ்பேகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story