வெளியூர்களுக்கு பட்டாசுகளை கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்வதே பாதுகாப்பானது; அதிகாரி ஆலோசனை


வெளியூர்களுக்கு பட்டாசுகளை கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்வதே பாதுகாப்பானது; அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வெளியூர்களுக்கு கன்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

சிவகாசி,

சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசுகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் லாரி செட் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-சிவகாசி பகுதியில் இருந்து பட்டாசு பண்டல்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் போது அனுபவம் உள்ள டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அனுபவம் இல்லாதவர்கள் பட்டாசு பண்டல்களை கையாளும் போது விபத்துகள் ஏற்படுகிறது.

லாரி செட்டுகளில் பட்டாசு பண்டல்களை அடுக்கி வைக்கும் போது முறையான விதிகளை கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் கடமையை தவறியவர்களே. பட்டாசு பண்டல்கள் ஏற்றப்பட்ட லாரிகளை எக்காரணத்தை கொண்டும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நிறுத்த கூடாது. மேலும் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பெட்ரோல் நிரப்ப கூடாது. இது பெரிய அளவிலான விபத்தை ஏற்படுத்தும். லாரிகளில் பட்டாசுகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் போது பல நேரங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பட்டாசுகளை சேதமாக்கி விடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க கன்டெய்னர் லாரிகளில் பட்டாசுகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

சிலர் பயணிகள் செல்லும் பஸ், வேன், கார் போன்றவற்றில் பட்டாசு பண்டல்களை கொண்டு செல்கிறார்கள். இது ஆபத்தில் முடியும். பல லாரி செட்டுகளில் பட்டாசு பண்டல்கள் சீசன் காலங்களில் செட்டுக்கு வெளியே குவித்து வைக்கப்படுகிறது. இது விபத்தை ஏற்படுத்தும். குடோனுக்கு வெளியே பட்டாசு பண்டல்களை வைக்கக் கூடாது. அதே போல் ஒரு குடோனில் 4 பேர் லாரி செட் நடத்த கூடாது. விபத்து காலங்களில் இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும். பட்டாசு குடோன்களை உள்வாடகைக்கு விடக்கூடாது.

வண்ணத் தீக்குச்சி (கலர்மேட்ச்) பெட்டிகளை மற்ற பட்டாசு பண்டல்களுடன் கொண்டு செல்ல கூடாது. தரம் இல்லாத அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடாது. லாரிகளில் பட்டாசுளை ஏற்றும்போதும், இறக்கும்போதும் ரப்பர்சீட் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பட்டாசு பண்டல்கள் கீழே விழுந்தால் விபத்து ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அதிகாரிகள் கே.பாண்டே, அமித்கோயல், நித்தின்கோயல், பிரலேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story