காங்கேயம் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ரசீது மூலம் ரூ.24 லட்சம் மோசடி; தணிக்கையில் தகவல்


காங்கேயம் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ரசீது மூலம் ரூ.24 லட்சம் மோசடி; தணிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ரசீது மூலம் ரூ.24 லட்சம் மோசடி நடந்தது தணிக்கையில் தெரிய வந்து உள்ளது.

காங்கேயம்,

காங்கேயம் மெயின் ரோட்டில் காங்கேயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன், மாடு, ஆடுகள் வாங்க கடன், பண்ணைசாரா கடன், வீட்டு கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சங்கத்திற்கு வரும் பணம் அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் காங்கேயம் சரக கூட்டுறவு தணிக்கை அலுவலர் மாதேஸ்வரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இந்த சங்கத்தில் ஆய்வு செய்தார். அப்போது 2018-19-ம் ஆண்டுக்கான தணிக்கையில் ரூ.24 லட்சம் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. சங்கத்தில் இருந்து மத்திய கூட்டுறவு வங்கிக்கு செலுத்தவேண்டிய தொகைக்கு, பணம் செலுத்தியதாக போலி ரசீது மூலம் இந்த மோசடி நடைபெற்றது தணிக்கையில் தெரிய வந்தது. இந்த நிலையில் சங்கத்தின் செயலாளர் ஜோதிலட்சுமி தலைமறைவானார்.

இது பற்றி சங்கத்தின் தலைவர் வெங்கு(எ)மணிமாறன் கூறும்போது, சங்கத்தின் செயலாளர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். அதிகாரிகள் தணிக்கை செய்தது தொடர்பான அறிக்கை என்னிடம் வரவில்லை. தணிக்கை தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன். முறைகேடு நடந்ததா? என்பது குறித்து தெரியவரும். அவ்வாறு முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் சங்க செயலாளர் விடுப்பில் சென்று உள்ளதால் அதிகாரிகளின் அனுமதி பெற்று வேறு ஒருவர் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Next Story