உளுந்தூர்பேட்டை அருகே, தந்தையை குத்திக்கொன்ற மகன் - மதுகுடிக்க பணம் தராததால் வெறிச்செயல்


உளுந்தூர்பேட்டை அருகே, தந்தையை குத்திக்கொன்ற மகன் - மதுகுடிக்க பணம் தராததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை குத்திக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 65). தொழிலாளி. இவருடைய மகன் இளையராஜா (38). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று தனது தந்தை ஏழுமலையிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்றும், மதுகுடிக்க என்றால் பணம் தரமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இளையராஜா அருகில் கிடந்த கத்தியை எடுத்து தனது தந்தை என்றும் பாராமல் சரமாரியாக ஏழுமலையை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story