மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 3:00 AM IST (Updated: 1 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 36 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் தாசில்தார், மண்டல துணை தாசில்தார்கள் தலைமையில் போலீஸ், மின்சார துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு உள்ளனர். வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால், மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களையும் ஆய்வு செய்து உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் அடங்கிய வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த படத்தில், வெள்ளம் வந்தால் மக்களை மீட்டு எந்த பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும், உணவுப்பொருட்கள் எங்கு வைக்கப்பட்டு உள்ளது, யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று உள்ளன. இதுதவிர அந்தந்த கிராமங்களில் வெள்ளத்தின்போது, பெண்களுக்கு உதவுவதற்காகவும், கால்நடைகளை மீட்பதற்கும், மரங்கள் விழுந்தால் அதனை வெட்டி அகற்றுவதற்காகவும் தனித்தனியாக மீட்பு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இந்த மாதம் மழை பெய்வதோடு, டெங்கு காய்ச்சல் நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 150 டெங்கு தடுப்பு பணியாளர்களும், சுற்று வட்டார ஊரக பகுதிகளில் 530 டெங்கு தடுப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தனியாக காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் என்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை வருகிற 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் 36 குளங்களில் பணிகள் நடந்து வருகின்றன. 422 ஊருணிகள், 87 சிறுபாசன குளங்களிலும் பணிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலான குளங்களில் 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடியில் புத்தக திருவிழா வருகிற 5-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஆணைகள் எதுவும் வரவில்லை. அதே நேரத்தில் வருகிற 4-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு வந்து உள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க 2 ஆயிரத்து 500 ஏக்கர் இடம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மணப்பாடு அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் எந்தவித குடியிருப்புகளும் கணக்கில் எடுக்கப்படவில்லை. காலியிடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story