பொருளாதார பாதிப்புகளை மக்களிடம் எடுத்து கூறி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்


பொருளாதார பாதிப்புகளை மக்களிடம் எடுத்து கூறி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:15 AM IST (Updated: 1 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார பாதிப்புகளை மக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கோவை காளப்பட்டியில் நடைபெற்றது. செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் அறிமுகவுரையாற்றினார். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சல்மான் குர்ஷித் பேசும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் நிறையபேர் வக்கீல்கள் உள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் சட்டம் குறித்து வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ப.சிதம்பரம் வழக்குதான். காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காவும், சுதந்திரத்துக்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்காகவும் மிகவும் பாடுபட்டது. தற்போது நாட்டில் சுதந்திரம் இல்லாமல் உள்ளது. நாட்டில் மிகப்பெரிய சோக சம்பவம் எதுவென்றால் அது மகாத்மா காந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தான்.

அதில் யார் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று எங்களுக்கு தெரியும். இந்த நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் காந்தி இறக்கும் தருவாயில் கூட ஹேராம் என்று சொன்னபடியே தான் உயிரை விட்டார். தற்போது பொய்யால் நாம் தோற்கடிக்கப்பட்டு உள்ளோம். நமது இலக்கு உண்மைக்காக போராடுவதே ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மற்றும் கூட்டணி யில் உள்ள தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற ராகுல் காந்தி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். கூட்டத்துக்கு வந்தவர்கள் இந்த அறையை விட்டு வெளியேறும் போது சக்திமான்களாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மயூரா ஜெயக்குமார் பேசும்போது, காங்கிரஸ் கட்சி மதம், சாதி, இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். நாட்டு மக்களை காக்க ராகுல் காந்தி, சோனியாகாந்தி தலைமையில் 2-ம் சுதந்திர போராட்டம் நடத்துவோம். மக்களை வஞ்சிக்கும் பா.ஜனதாவை ஒழிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

இந்தியா முழுவதும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும். காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்துவைத்து விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

25 ஆண்டு காலம் மத்திய மந்திரியாக பதவி வகித்தவருக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் நோக்கமாகும். மோடி அரசின் பாசிச நடவடிக்கையை இந்த சிறப்பு பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சவாலை எதிர்கொள்ள சோனியா காந்தி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசை பலப்படுத்த தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் அயராது பாடுபடவேண்டும்.

இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டு இருக்கிறது. வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. இத்தகைய பாதிப்புகளை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் பா.ஜனதா அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம் நடத்த வேண்டும். இதுதவிர பொருளாதார பாதிப்புகளை மக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசுக்கு எதிராக இந்த மாதம் (அக்டோபர்) இறுதியில் போராட்டம் நடத்தப்படும்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மீது மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நீட்தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஒரு பக்கம் எதிர்த்து கொண்டு இன்னொரு பக்கம் ஆதரவாக உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் கடுமையான உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மொழித் திணிப்பை ஆதரித்தது கிடையாது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இந்திய ஜனநாயக வரலாற்றில் கருப்பு நாள் ஆகும். ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலின் நலன் காக்க திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஆயத்த ஆடை உற்பத்திக்கு என்று மத்திய அரசால் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

கோவை குடிநீர் மேலாண் மை மற்றும் வினியோக பணிகளுக்கு ரூ.3200 கோடிக்கு பிரான்ஸ் நாட்டு கம்பெனியுடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்து உள்ளது. ஒரு அந்நிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஏழை- எளிய மக்களிடம் அதிக பதிவு கட்டணமும், அதிகப்படியான மீட்டர் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், மூத்த தலைவர் குமரி அனந்தன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜோதிமணி, முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தங்கபாலு மற்றும் மெய்யப்பன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் திருச்சி லூயிஸ் அடைக்கலராஜ், ஹரிகர சுதன், காட்டூர் சோமு, சரவணக்குமார், கோவை செல்வம், பச்சைமுத்து, சவுந்தரகுமார், எம்.என்.கந்தசாமி, ஆர்.ராதாகிருஷ்ணன், வீனஸ் மணி, காலனி ஆர்.வெங்கடாச்சலம், எம்.பி.சக்திவேல், எம்.எஸ்.பார்த்தீபன், சிங்கை பாரதி, ஆர்.வி.ராகவன், செல்வராஜ், சகாயராஜ், சி.வி.ராஜன், ராம்நகர் நந்தகுமார், ஆர்.நாகராஜ், பாப்பாத்தி, உதயகுமார், அமல்ராஜ், முத்துராமன், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, காந்தன், பூபாலன், ஆனந்தராஜ், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கலைச்செல்வன், கிருஷ்ணசாமி, இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், யசோதா, பலராமன், கோபண்ணா, செல்வப்பெருந்தகை, திருச்சி வேலுச்சாமி, குமரி மகாதேவன், ராம்கி உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாேனார் கலந்து கொண்டனர். முடிவில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் நன்றி கூறினார். 

Next Story