சாமிநாதபுரம் கவுரம்மாள் காலனியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணியால் பொதுமக்கள் அவதி - விரைந்து முடிக்க கோரிக்கை
சேலம் சாமிநாதபுரம் கவுரம்மாள் காலனியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட சாமிநாதபுரம் கவுரம்மாள் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இதன்பின்பும் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதையொட்டி சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்களால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதேபோல் சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு இடையே சாலையில் சென்று வருகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை யை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மாணவர்களின் சிரமத்தை போக்குவதற்கு ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story