நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 8:38 PM GMT)

குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, 

குற்றாலம் அருவிகளில் சீசன் முடிந்தும் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்துக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மதியம் 2.30 மணிக்கு மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று மதியம் 12.45 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

மதியம் 2.30 மணிக்கு மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே போலீசார் அருவிகளில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றி குளிக்க தடை விதித்தனர்.

நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

நெல்லை, பாபநாசம், கடையம், பாவூர்சத்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. பின்னர் விடிய, விடிய மழை தூறிக் கொண்டிருந்தது. தென்காசி, ஆலங்குளம், முக்கூடல், செங்கோட்டை பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு பலத்த மழை பெய்தது.

இதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று மதியம் 2 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 2.45 மணிக்கு சாரல் மழை பெய்தது. 2 நாட்களாக பெய்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானம், மகாராஜநகர் சிறுவர் பூங்கா ஆகியவற்றில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 90 மில்லிமீட்டர் மழை பதிவானது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தென்காசி -90, சிவகிரி -77, ஆய்குடி-70, சங்கரன்கோவில்-65, ராமநதி-60, கருப்பாநதி-54, செங்கோட்டை-49, குண்டாறு-40, அடவிநயினார் அணை-32, சேர்வலாறு-31, சேரன்மாதேவி-30, அம்பை-23, கடனாநதி-21, கொடுமுடியாறு-20 நெல்லை-20, பாளையங்கோட்டை-17.2, பாபநாசம்-17, மணிமுத்தாறு-14, ராதாபுரம்-12, நாங்குநேரி-11, நம்பியாறு-5.

Next Story