முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நட்சத்திர மீன்கள் கடத்தல்


முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நட்சத்திர மீன்கள் கடத்தல்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட நட்சத்திர மீன்களை மதுரை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம்போல தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, இரவு 9.45 மணியளவில் அந்த ரெயிலில் சந்தேகப்படும்படியான பொருள் கொண்டுவரப்படுவதாக பாதுகாப்பு படை கமிஷனர் அலுவலகத்துக்கு பயணி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ் தலைமையிலான போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் ரெயில் இரவு 10.45 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. உடனடியாக பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாகர், தமிழக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகாமி, கேசவன் உள்ளிட்ட போலீசார் எஸ்-2 பெட்டியில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அந்த பெட்டியில் கொடைரோடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நாகலாபுரம் காலனியை சேர்ந்த பெருமாள் மகன் சேது(வயது 50), அவரது மகன் பாண்டி(22) ஆகியோர் 5 பிளாஸ்டிக் பைகளில் பதப்படுத்தப்பட்ட 632 நட்சத்திர மீன்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர மீன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட நட்சத்திர மீன்களின் மதிப்பு சுமார் ரூ.31 ஆயிரம் இருக்கும் என்று கருதப்படுகிறது. நட்சத்திர மீன்களை பொறுத்தமட்டில் அழிந்து வரும் கடல் வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரையில் உள்ள வனக்காப்பாளரிடம் அவர்கள் 2 பேரும், பறிமுதல் செய்யப்பட்ட 632 நட்சத்திர மீன்களும் ஒப்படைக்கப்பட்டன. தொலைபேசியில் கிடைத்த தகவலையடுத்து உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக ரெயில்வே போலீசாரை, மதுரை கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் ஜெகநாதன் பாராட்டினார்.

Next Story