சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு


சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது ஏராளமானோர் கலெக்டர் சிவஞானத்திடம் மனு கொடுத்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள நார்த்தம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் தாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருப்பதாகவும் எங்களுக்காக அரசு அமைத்து தந்த பாதையை நாங்கள் நிரந்தரமாக பயன்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சுந்தரம், கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வத்திராயிருப்பு பேரூராட்சியில் உள்ள வராகசமுத்திரம், ஆயகுளம் ஆகிய கண்மாய்களில் இருந்து வில்லராயன்குளத்துக்கு தண்ணீர் செல்ல விடாமல் ஓடையின் இருபுறமும் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் மகாராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய பாலத்தின் கீழே குப்பைகளையும், மண்ணையும் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் வரும் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரியபாலத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள என்.திருவேங்கிடபுரம் காலனியில் எந்தவித அடிப்படைவசதியும் இல்லை என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதுடன் தங்கள் பகுதியில் பெண்களுக்கான கழிப்பறை வசதி, தெருவிளக்குகள், மயானம், குளியல்தொட்டி, திருமண மண்டபம், அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு கோரி உள்ளனர்.

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் காளிராஜன் (வயது29). இவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவியை கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதித்தேன். அங்கு தவறான சிகிச்சை அளித்ததால் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டனர். ஏழை மக்களுக்கு இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க அந்த தனியார் ஆஸ்பத்திரியின் உரிமத்தை ரத்து செய்து இழப்புக்கு காரணமான டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்யவும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story