சொத்து தகராறில் கணவரை கொலை செய்து விட்டதாக மாமனார் மீது மருமகள் புகார் - பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டம்


சொத்து தகராறில் கணவரை கொலை செய்து விட்டதாக மாமனார் மீது மருமகள் புகார் - பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 9:24 PM GMT)

சொத்து தகராறில் கணவரை கொலை செய்து விட்டதாக மாமனார் மீது மருமகள் போலீசில் புகார் செய்தார். மேலும் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி, 

வாணியம்பாடியை அடுத்த புல்லாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் தங்கராஜ் (வயது 29). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் கனவாய்புதூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோகித் (5), பார்சித் (3) என்ற 2 மகன்களும் 45 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் தங்கராஜ் தனது தந்தை சிகாமணியிடம் கடந்த 6 மாதங்களாக சொத்து பிரித்து தரக்கோரி கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து தங்கராஜ் தனது மனைவி சாந்தி மற்றும் குழந்தைகளையும் தனது மாமியார் வீட்டில் விட்டு விட்டார். இவர் இரவு நேரத்தில் மட்டும் புல்லாகுட்டையில் உள்ள வீட்டில் தங்கி வந்துள்ளார். சிகாமணிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தனது மகன்களான சிவசக்தி மற்றும் தங்கராஜிக்கு முறையாக பிரித்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி சாந்தியிடம் தங்கராஜ் நாளை வந்து உன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி வராததால் சந்தேகம் அடைந்த சாந்தி தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் தங்கராஜ் வீட்டின் அருகே உள்ளவர்களிடம் கேட்டுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது தங்கராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை தங்கராஜ் பிணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர்.

ஆனால் சாந்தி மற்றும் உறவினர்கள் தங்கராஜின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தரையில் அமர்ந்து பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்களிடம் சாந்தி அளித்த புகாரில் தனது கணவர், அவரது தந்தை சிகாமணியிடம் சொத்தில் பங்கு கேட்டதால் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளனர். உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் மாமனார் சிகாமணி, தங்கராஜின் அண்ணன் சிவசக்தி, அவரது மனைவி சத்தியா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதால் அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை பிணத்தை வாங்க மாட்டோம் என இரவு 8.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story