கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவு சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் - கலெக்டர் மெகராஜ் பேச்சு
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவு சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என கலெக்டர் மெகராஜ் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு வளையல், பூ, மஞ்சள், இனிப்பு வகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தங்கள் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
ஒரு குழந்தையின் வளர்ச்சி, அது கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.
கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது. இதனை போக்கிட சத்தான உணவு வகைகளான பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், பாதாம், உலர் பழவகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகள் பரிசோதனை விவர அட்டையில் குறிப்பிட்டு உள்ளவாறு சரியான கால இடைவெளியில், மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மேலும் அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற கர்ப்பிணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி மற்றும் வட்டார மருத்துவர்கள், கர்ப்பிணிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story