நாமக்கல்லில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


நாமக்கல்லில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:15 AM IST (Updated: 1 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல், 

நாமக்கல்லில் உள்ள வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது60). பொரி வியாபாரி. இவரது மனைவி மரகதம் (58). ஆயுதபூஜை நெருங்கி வருவதால் விஜயகுமாரின் வியாபாரத்திற்கு பணம் தேவைப்பட்டது. இதையடுத்து மரகதம் நேற்று மதியம் 1 மணியளவில் நாமக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 5½ பவுன் நகையை அடமானம் வைக்க சென்றார்.

பின்னர் அவர் வங்கியில் நகையை அடமானம் வைத்து, அங்கு கொடுக்கப்பட்ட ரூ.99 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். வழியில் மஜித் தெரு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் மரகதம் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.

இதைத்தொடர்ந்து பணத்தை பறிகொடுத்த மரகதம் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதற்கிடையே மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரகதத்திடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்த போலீசார் வங்கி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் பணம் பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல்லில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story