குடியாத்தம் அருகே, தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த மர்ம நபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா?
குடியாத்தம் அருகே ரெயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் பாறாங்கற்களை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம்,
சென்னையில் இருந்து ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை வழியாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடக மாநிலத்திற்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரெயில் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு, குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.
குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு அருகே முப்பதுகண் பாலம் அருகே ரெயில் மெதுவாக வந்த போது தண்டவாளத்தில் பெரிய அளவில் கல் இருந்துள்ளது. இதனைக்கண்ட ரெயில் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தி உள்ளார்.
பின்னர் ரெயில் டிரைவர் மற்றும் பணியாளர்கள் இறங்கி சென்று பார்த்த போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 15 கிலோ எடையிலான பாறாங்கல் இருந்துள்ளது. பின்னர் அதனை அப்புறப்படுத்திவிட்டு இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பின்னர் சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
இதனையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அதே வழியாக சரக்கு ரெயில் வந்துள்ளது. அந்த ரெயில் முப்பதுகண் பாலம் அருகே மெதுவாக வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் பெரிய அளவில் பாறாங்கல் இருப்பதை கண்ட ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் ரெயில் அந்த பாறாங்கல்லில் மோதியதில், அந்த கல் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்தது. இதுகுறித்து சரக்கு ரெயில் டிரைவர் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து ரெயில்வே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்த சம்பவம் ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? அல்லது ரெயிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் இதன் மூலம் தப்பி செல்வதற்கோ, ஏறுவதற்கோ ஏதுவாக கற்களை வைத்தார்களா? என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், தண்டபாணி, ஏட்டு அருண்காந்தி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே இருப்பு பாதையில் போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story