பெங்களூரு மாநகராட்சி தலைமை பதவி எந்த கட்சிக்கு? மேயர் தேர்தல் இன்று நடக்கிறது - பா.ஜனதா- காங்கிரஸ் இடையே கடும் போட்டி


பெங்களூரு மாநகராட்சி தலைமை பதவி எந்த கட்சிக்கு? மேயர் தேர்தல் இன்று நடக்கிறது - பா.ஜனதா- காங்கிரஸ் இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 1 Oct 2019 5:00 AM IST (Updated: 1 Oct 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு குளறுபடிகள் நீடித்த நிலையில் திட்டமிட்டப்படி பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மாநகராட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி எழுந்து உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த நிலையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றின.

ஒவ்வொரு ஆண்டும் மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சியும், துணை மேயர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சியும் வைத்துக்கொண்டது. 2018-2019-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகேயும், துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பத்ரேகவுடாவும் இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த 28-ந் தேதி முடிவடைந்தது.

இதனால் பெங்களூரு மாநகராட்சி புதிய மேயர் தேர்தல் கடந்த 27-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு திடீரென்று பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது அக்டோபர் மாதம் 1-ந் தேதி (அதாவது இன்று) நடத்தப்படும் என்று மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா அறிவித்தார். மேலும் பா.ஜனதா கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினமே நிலைக்குழுக்களுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

ஆனால், பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 12 நிலைக்குழுக்களில் 8 நிலைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. இவர்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் வரை உள்ளது. இதனால் நிலைக்குழு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி அதன் உறுப்பினர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு 8 நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் பதவிக்காலம் முடியும் முன்பு அந்த நிலைக்குழுக்களுக்கான தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 8 நிலைக்குழுக் களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா தீவிரமாக ஈடுபட தொடங்கியது. அதாவது காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிவு, மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்திருப்பது, பெங்களூருவை சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் கைப்பற்ற பா.ஜனதா திட்டம் வகுத்தது.

ஆனாலும், மேயர் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்று பார்க்கும்போது பா.ஜனதா கவுன்சிலர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் நீண்டு செல்கிறது. பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, கவுன்சிலர்களான மஞ்சுநாத் ரெட்டி, எல்.சீனிவாஸ் உள்பட மேலும் சிலரும் மேயர் பதவியை பெற முயற்சித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஆதரவாளர் மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரின் ஆதரவாளர்கள் என்று 2 கும்பலாக பா.ஜனதா கவுன்சிலர்கள் பிரிந்துள்ளனர். இதனால் மேயர் பதவிக்கு ஒருமனதாக பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்வது என்பது முடியாத நிலை உள்ளது.

இதேபோல் பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் குறிப்பிடும் படியாக எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை. இதுபோன்ற குழப்பங்களால் மேயர் தேர்தல் திட்டமிட்டப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே, நேற்று சிவமொக்காவில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அடுத்த 1½ மாதத்துக்கு பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நிறுத்தி வைக்கப்படும்‘ என்றார். மேலும் நகர அபிவிருத்தி துறையின் கூடுதல் செயலாளர் அஜய்குமார் நேற்று மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், ‘கர்நாடக ஐகோர்ட்டு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர், நிதி நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகியவற்றின் தேர்தலை ஒன்றாக நடத்த வேண்டும் என்பதற்காக 1-ந் தேதி (இன்று) நடக்க உள்ள மேயர், துணை மேயர், 4 நிலைக்குழுக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது. இதன்மூலம் பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா நேற்று அளித்த பேட்டியில், ‘பெங்களூரு மாநகராட்சி மேயரின் பதவிக்காலம் கடந்த 28-ந் தேதி முடிவடைந்தது. இதனால், கடந்த 27-ந் தேதி மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி (இன்று) மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று மறுஅறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மேயர், துணை மேயர், வரி மற்றும் நிதி, சுகாதாரம், கணக்கு மற்றும் மார்க்கெட் ஆகிய 4 நிலைக்குழுக்களுக்கான தேர்தல் நாளை(அதாவது இன்று) நடத்தப்பட உள்ளது‘ என்றார்.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு மாநகராட்சி அரங்கில் தேர்தல் நடக்க உள்ளது.

பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ள நிலையிலும், திட்டமிட்டப்படி பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்கும் என்று ஹர்ஷகுப்தா கூறியதை தொடர்ந்து நேற்று மாலையில் எடியூரப்பா சிவமொக்காவில் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் என்பது நாளை(அதாவது இன்று) காலையில் தெரியும்‘ என்றார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை பதவியை கைப்பற்ற பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி எழுந்து உள்ளது. மேயர் தேர்தல் முடிவு பல்வேறு யூகங்களுக்கு விடை அளிப்பதாக இருக்கும்.

மேயர் தேர்தலையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. மேலும் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
மேயராக தேர்வாக 129 வாக்குகள் தேவை

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலை பொறுத்தமட்டில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள், கர்நாடக மேல்-சபை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தற்போதைய நிலவரப்படி பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் 257 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர், டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள் 9 பேர், கர்நாடக மேல்-சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) 22 பேர், எம்.எல்.ஏ.க்கள் 23 பேர், மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 76 பேர், ஜனதாதளம்(எஸ்) கவுன்சிலர்கள் 14 பேர், சுயேச்சை கவுன்சிலர்கள் 7 பேர், பா.ஜனதா கவுன்சிலர்கள் 101 பேர் அடங்குவர்.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 104 வாக்காளர்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 21 வாக்காளர்களும், பா.ஜனதா கட்சிக்கு 125 வாக்காளர்களும் உள்ளனர். இதன்மூலம் மேயர் வேட்பாளர் வெற்றி பெற 129 வாக்குகள் தேவைப்படுகிறது. சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

Next Story