பால்கர் அருகே, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், போதைப்பொருட்களுடன் 2 பேர் கைது
பால்கர் அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாசவேலைக்கு இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து கைதான இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வசாய்,
பால்கர் மாவட்டம் பொய்சர் சிலார் பாட்டா பகுதியில் மும்பை -ஆமதாபாத் நெடுஞ்சாலையில் இந்துஸ்தான் தாபா என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் அருகே பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்ய கும்பல் ஒன்று வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு பால்கர் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த கார் ஒன்றை போலீசார் சுற்றி வளைத்தனர். அந்த காரில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். இதில் காருக்குள் 2 சாக்குப்பைகள் வைக்கப்பட்டு இருந்தன.
அந்த சாக்குப்பைகளை போலீசார் திறந்து பார்த்தபோது, உள்ளே ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்த சாக்குப்பைகளில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 4 கைத்துப்பாக்கிகள், 63 தோட்டாக்கள் இருந்தன. மேலும் 80 லட்சம் ரொக்கம், 8.9 கிலோ ‘எப்ட்ரைன்’, 8½ கிலோ டி.எம்.டி., ½ கிலோ ஹெராயின், 3.9 கிலோ ‘டுடு’ ஆகிய போதைப்பொருட்களும் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரையும் கைது செய்த னர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.14 கோடி என கூறப்படுகிறது. இது குறித்து பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுரவ் சிங் கூறியதாவது:-
கைதான இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் போதைப்பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடிவருகிறோம்.
இந்த கும்பல் யாருக்கு போதைப்பொருட்கள், ஆயுதங்களை விற்பனை செய்ய கொண்டு வந்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
நாசவேலைகளை அரங்கேற்ற இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்பது குறித்து கைதான இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும் பயங்கரவாத செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட இருந்ததா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story