பா.ஜனதாவுக்கு தாவிய தேசியவாத காங்கிரஸ் பெண் வேட்பாளர் - மராட்டிய சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பு
தேசியவாத காங்கிரஸ் பெண் வேட்பாளர் பா.ஜனதாவில் சேர்ந்தார். இது மராட்டிய சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன.
இந்த கூட்டணியில் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தொகுதி தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த தொகுதியில் அந்த கட்சி வேட்பாளராக நமிதா முன்டாடா அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து, கைஜ் தொகுதியில் தேர்தல் பிரசார பணிகளில் தேசியவாத காங்கிரசார் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேட்பாளர் நமிதா முன்டாடா நேற்று திடீரென தேசியவாத காங்கிரசில் இருந்து விலகினார்.
மேலும் பார்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரி பங்கஜா முண்டே முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜனதா, சிவசேனாவில் சேர்ந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் களத்தில் இருந்த வேட்பாளரே கட்சி தாவியது தேசியவாத காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், நமிதா முன்டாடா பா.ஜனதா சார்பில் கைஜ் தொகுதியில் போட்டியிடுவார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நமிதா முன்டாடா கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது, இந்த தொகுதியில் பா.ஜனதாவின் சங்கீதா தோம்பரேயிடம் தோல்வியை தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர் ஒருவர் கட்சி தாவியது தேசியவாத காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story