ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்


ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 1 Oct 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக நந்தகோபால் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார். மேலும் அவர் மூலனூர் பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலராகவும் செயல்பட்டு வந்தார். இவர் நேற்று முன்தினத்துடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளான கடந்த 29-ந்தேதி நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.

நந்தகோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் செயல் அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளுக்கு கட்டிட அனுமதி வழங்கியது மற்றும் அதில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரி விதித்தது என்பது உள்பட பல்வேறு புகார்கள் நிலுவையில் அவர் மீது இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 17 பி ஒழுங்கு நடவடிக்கை பிரிவின் கீழ் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பணியிடை நீக்கத்திற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-

முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் அளித்த உத்தரவின் பேரில், மாவட்ட உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் முத்தூர் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story