‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவர் முகமது இர்பான் சேலம் கோர்ட்டில் சரண்


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவர் முகமது இர்பான் சேலம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாணவர் முகமது இர்பான், சேலம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.

சேலம், 

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (வயது 20), அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை தேனி சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். அப்போது, டாக்டர் வெங்கடேசனிடம் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது எப்படி? அதற்கு உதவி புரிந்தவர்கள் யார், யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், தங்களுக்கு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர் ஷபி என்பவர் மூலம் ரஷித் என்ற இடைத்தரகர் அறிமுகம் ஆனதாகவும், ஷபியின் மகன் முகமது இர்பானும், ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் வாணியம்பாடியில் வைத்து டாக்டர் ஷபியை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது மகன் முகமது இர்பான் திடீரென மாயமானார். அவர், மொரீசியஸ் நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. இதுதவிர, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே மாணவர் முகமது இர்பான் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுத்து வந்தனர்.

இந்தநிலையில், மாணவர் முகமது இர்பான் நேற்று மதியம் 12 மணியளவில் சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் உடனடியாக கோர்ட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது, கோர்ட்டில் சரணடைந்த மாணவரை வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சிவா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மாணவர் முகமது இர்பான், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து மாணவர் முகமது இர்பானின் வக்கீல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், முகமது இர்பான் மொரீசியஸ் நாட்டில் தான் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அவர் தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் சேரவில்லை. இருந்தாலும், அவரது தந்தையை சி.பி.சி. ஐ.டி. போலீசார் கைது செய்து தொந்தரவு செய்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்து வருவதால், இர்பான் மொரீசியசில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர் அங்கிருந்து சேலம் வந்து கோர்ட்டில் சரணடைந்துள்ளார். அவர் எங்கும் தப்பி ஓடவில்லை. தலைமறைவும் ஆகவில்லை. அவரது குடும்பத்தினரை தொந்தரவு செய்ததால், தானாக வந்து சரணடைந்தார், என்றார்.

Next Story