பிறந்த நாள் விழா: சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை


பிறந்த நாள் விழா: சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

நடிப்பு உலகில் இமயமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலையின் கீழ் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சிவாஜி கணேசனின் மகன்களும், நடிகர்களுமான ராம்குமார், பிரபு, பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு ஆகியோரும் சிவாஜி கணேசன் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் உல.ரவீந்திரன், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story