உடுமலையில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு; கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை


உடுமலையில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு; கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

போடிப்பட்டி,

உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து விவசாயிகளுக்கு தற்போது உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.இந்தநிலையில் உரங்கள் சரியான விலையில் விற்கப்படுகிறதா? இருப்பு, விற்பனை போன்ற பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது போன்ற விவரங்களை அவ்வப்பொழுது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரிபார்த்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை பகுதியிலுள்ள தனியார் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) விஜயகமலம் தலைமையில் திருப்பூர் வேளாண்மை அலுவலர்(தரக்கட்டுப்பாடு) மற்றும் காங்கேயம்,பொங்கலூர், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் இணைந்து 4 குழுக்களாக பிரிந்து உடுமலையில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஒரு சில கடைகளில் பி.ஓ.எஸ் எந்திரங்கள் மூலம் உரங்கள் பட்டியலிடப்படாமல் இருந்தது தெரிய வந்தது. எனவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்டிப்பாக பி.ஓ.எஸ் எந்திரங்கள் மூலம் பட்டியலிட வலியுறுத்தப்பட்டது. அத்துடன் ஆய்வின்போது உரக்கடைகளின் உர உரிமம் காலாவதி ஆகியிருந்தாலோ, உரங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் விற்பனை செய்வது தெரிய வந்தாலோ, பி.ஓ.எஸ் எந்திரங்கள் மூலம் பட்டியலிட்டு வழங்கப்படாமல் இருந்தாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி அந்த உர விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story