கோவை ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு: மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
கோவை ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடிகரை,
கோவை சாய்பாபா காலனியில் ஜீவா நகர், வண்டிப்பாதை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் இங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அதில் இங்குள்ள வீடுகளை காலி செய்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிலர் மட்டும் வீடுகளை காலி செய்து வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சில வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி ஜீவா நகரில் குடியிருந்தவர்களுக்கு கீரணத்தம்புதூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அதற்கான டோக்கன் வழங்கப்பட்டன. இதையடுத்து அவர்களும் காலி செய்து விட்டு அங்கு சென்றனர். இதன்பின்னர் அவர்கள் காலி செய்த 143 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. மீதமுள்ள 120 வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 35 வீடுகள் வரை இடிக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று காலை மீதமுள்ள 90 வீடுகளை இடிக்க மாநகராட்சி நகர் அமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி நகர் அமைப்பு அலுவலர் சத்யா, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார், மின்வாரிய துறை உதவி பொறியாளர் சந்திரபிரபா ஆகியோர் வந்தனர். மேலும் பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டன. ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
இதன்பேரில் பி.ஆர்.நடராஜன் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுசி.கலையரசன் மற்றும் ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள், உயர் அதிகாரிகளுடன் பேசி ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி கூறுகையில், 50 வருடங்களுக்கு மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வரும் ஜீவா நகர் மக்கள் தற்போது வேறு இடத்திற்கு செல்ல உள்ளனர். குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் எந்த இடத்தில் குடி அமர்த்துவது என்பது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் ஜீவா நகர் பகுதி பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடம் குறித்து முடிவு எடுக்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் செல்போனில் கூறியதால் நாங்கள் இந்த முற்றுகையை கைவிடுகிறோம். அதேபோல் கோர்ட்டு உத்தரவுப்படி பொதுமக்கள் இந்த இடத்தை காலி செய்வார்கள் என்றார்.
Related Tags :
Next Story