சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 6-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திரமோடி ஆகிய இருவரும் வருகிறார்கள். அப்போது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைகல் ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றிப்பார்க்கின்றனர்.

இதன் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அப்போது, மாமல்லபுரம் கடல் வழியாக விஷமிகள் யாரும் ஊடுருவாத வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம், கல்பாக்கம், வெண்புருஷம், கொக்கிலமேடு, நெம்மேலி, சூளேரிக்காடு, தேவனேரி, பட்டிபுலம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடலோர பாதுகாப்பு படை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீன்பிடிக்க செல்லாத நாட்களில் தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் தரப்பில் எழுந்துள்ளது.

மேலும், இதையொட்டி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டு வந்த மாமல்லபுரம் மரகத பூங்கா தற்போது புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவை மேலும் அழகுபடுத்துவதற்காக பெங்களூரூவில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட பசுமை புற்களை புதைக்கும் பணியும், பல்வேறு விதமான மலர் செடிகளை கொண்டும் பூங்கா அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.

நேற்று பூங்காவில் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி எஸ்.சக்திவேல், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்கான மாமல்லபுரம் வெண்ணை உருண்டைகல் பகுதியின் பின்புறம் உள்ள தனியார் செல்போன் கோபுரங்களில் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அந்த செல்போன் கோபுரங்களை அகற்றும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு அருகில் சந்தேக நபர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பல ஆண்டுகளாக கடற்கரைக்கு செல்லும் பாதையில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படாததால், மணற்பாதையில் சுற்றுலா பயணிகள் கடலுக்கு சென்று வந்தனர். இதனால் வயது முதிர்ந்தவர்கள் கடற்கரை பகுதிக்கு சிரமப்பட்டு நடந்து சென்று திரும்பி வந்தனர். மேலும் இந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படாததால், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் ராட்சத அலையில் சிக்கி, மீட்கப்படும்போது, விரைவில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு வந்தது.

அதனால் இப்பாதையை அகலப்படுத்தி சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு, பேரூராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இந்த மணற்சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு சர்வதேச தரத்தில் சாலை அமைக்கப்பட உள்ளன. மேலும் அர்ச்சுனன் தபசு அருகில் ஆக்கிரமிப்பு கடைகளை அமையாமல் இருக்க அப்பகுதியில் சாலையை ஒட்டி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஐந்துரதம் பகுதியில் உள்ள சாலையின் நடுவில் கிரானைட் கற்களால் அழகிய வடிவில் தடுப்புச்சுவர்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் வந்து செல்பவர்களை கண்காணிக்க ரோந்து போலீசாரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story