தேவகோட்டையில் தலையாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுத்து அரசு ஊழியர்கள் போராட்டம், மகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை


தேவகோட்டையில் தலையாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுத்து அரசு ஊழியர்கள் போராட்டம், மகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் கொலை செய்யப்பட்ட தலையாரியின் உடலை வாங்க அரசு ஊழியர்கள் மறுத்து போராட்டம் நடத்தினர். கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் திருவேகம்பத்தூர் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கண்மாயில் 3 ஏக்கர் அளவிலான இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்(50) என்பவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தது குறித்து புகார் செய்யப்பட்ட நிை-லையில், கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இதற்கு திருவேகம்பத்தூரை சேர்ந்த தலையாரி ராதா கிருஷ்ணன்(50) என்பவர் தான் காரணம் என்று கணேசன் எண்ணினார். இதையடுத்து அவர், ராதாகிருஷ்ணனை போனில் மிரட்டினார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, அவரை வழிமறித்து கணேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதில் சம்பவ இடத்திலேயே ராதாகிருஷ்ணன் இறந்தார்.

இந்தநிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று காலை போராட்டம் நடந்தது. தலையாரியை வெட்டிக் கொன்ற கொலையாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்லப்பட்டவரின் வாரிசுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இறந்தவரின் உடலை வாங்கி செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறினர்.

மேலும் இந்த போராட்டம் மாலை வரை நீடித்ததை தொடர்ந்து, கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் மேசியாதாஸ் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார், இறந்தவரின் மகள் தாரணிக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி உடனடியாக வழங்கப்படும்.

ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறியதை தொடர்ந்து, ராதாகிருஷ்ணனின் உடல் மருத்துவமனையில் இருந்து திருவேகம்பத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்தநிலையில் போலீசார் விசாரணையில் கணேசன் ஏற்கனவே முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முன்பு, திருவேகம்பத்தூர் கிராம தலையாரி ராதாகிருஷ்ணன் படுகொலை செய்ததை கண்டித்து வருவாய்துறையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி வட்டார தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாவட்ட கிராம உதவியாளர் சங்க தலைவர் சின்னையா உள்பட வருவாய்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி வட்டார கிராம உதவியாளர்கள் சங்க செயலாளர் சோலை நன்றி கூறினார்.

Next Story