ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம் - சிறுபாக்கம் அருகே பரபரப்பு
சிறுபாக்கம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அருகே உள்ளது மா.குடிகாடு கிராமம். மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் தென்புறம் ஆகாசதுரை கோவில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் தடுப்பணைகள் அமைந்துள்ளன. இதனையொட்டி அரசுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த இடத்தை வெளிமாவட்டத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, வருவாய் துறையில் முறைகேடாக பட்டா வாங்கி, அதனை பயன்படுத்தி சிறுபாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்றுள்ளனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் வரப்புகள் அமைத்து ஆக்கிரமித்தனர். நேற்று காலை அதனை பார்த்த கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தங்கவேல் தலைமையில் மா.குடிகாடு பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரியும், வருவாய் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் வேப்பூர் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story