10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:00 AM IST (Updated: 2 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளி்ல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் திண்டுக்கல் வட்டக்கிளை தலைவர் சுருளிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஜான்சன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் ஜெயசீலன், வட்டக்கிளை பொருளாளர் வீரையன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கொடைக்கானலில் தமிழக அரசின் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் வனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க தலைவர் விவேகானந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, 21 மாத நிலுவை தொகை மற்றும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 1 மாத ஓய்வூதியம் போனசாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். முடிவில் வட்ட கிளை பொருளாளர் சேவியர் திவ்யநாதன் நன்றி கூறினார்.

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் முனியாண்டி, மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதை போல் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் கிரு‌‌ஷ்ணசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டையில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்ட கிளை தலைவர் அமாவாசை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 21 மாத நிலுவைத் தொகை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். இதில் வட்டார பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் பிச்சையம்மாள் நன்றி கூறினார்.

Next Story