தூத்துக்குடியில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் 68 பவுன் நகை கொள்ளை


தூத்துக்குடியில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் 68 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 1 Oct 2019 10:00 PM GMT (Updated: 1 Oct 2019 8:35 PM GMT)

தூத்துக்குடியில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 68 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள், கிறிஸ்தவ ஆலயத்திலும் புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 65). தொழில் அதிபரான இவர் வெளிநாடுகளுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி (55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் கடந்த 28-ந்தேதி பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் வசிக்கும் மூத்த மகனான மணிமாறன் நேற்று காலை ஸ்டேட் வங்கி காலனி மெயின் ரோடு வழியாக சென்றார். அப்போது அவர் தனது தந்தை வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் தனது தந்தை ஜெயபிரகாஷ் மற்றும் தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், சுந்தரம் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீசாரின் விசாரணையில், மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் புகுந்து அங்குள்ள கதவை உடைக்க முயன்றுள்ளனர்.

அது முடியாததால், முன்பக்கம் வந்து கிரில் கேட் மற்றும் மரக்கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. சுமார் 68 பவுன் நகைகளை மர்மநபர்கள் அள்ளி சென்று இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால், அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் உள்ளது. அந்த ஆலயத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளனர். தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலே கிறிஸ்தவ ஆலயத்திலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும், தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு கதவை உடைத்து இதே பாணியில் 3 கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே, அந்த கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பலே தற்போதும் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே, இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழில் அதிபர் வீடு மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story