சங்கரன்கோவிலில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை மோசடி
சங்கரன்கோவிலில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை மோசடி செய்த டிப்-டாப் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்,
நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவருடைய மனைவி லட்சுமி (வயது 65). இவர் சம்பவத்தன்று நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த பெண் ஒருவர், லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது பிரதமரின் கடன் திட்டத்தில் பணம் வாங்கி தருவதாகவும், என்னுடன் சங்கரன்கோவில் வந்தால் பணம் வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய லட்சுமி, அவருடன் சங்கரன்கோவிலுக்கு பஸ்சில் ஏறிச் சென்றுள்ளார்.
அங்கு பஸ்நிலையத்தில் இறங்கியதும், இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு போட்டோ எடுக்க வேண்டும். போட்டோவில் நகை அணிந்திருப்பது தெரியவந்தால் கடன் கிடைக்காது. எனவே நகையை கழற்றி என்னிடம் தாருங்கள், போட்டோ எடுத்த பின்னர் நகையை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனையும் உண்மை என நம்பிய லட்சுமி தான் அணிந்திருந்த 4 பவுன் நகையை கழற்றி, அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த லட்சுமி, இதுபற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமியிடம் நூதன முறையில் நகையை மோசடி செய்த டிப்-டாப் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story