நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. -காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்புமனு ஏற்பு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. -காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்புமனு ஏற்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்பட 37 பேர் மொத்தம் 46 வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான நடேசன் ஒவ்வொரு மனுக்களாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.

பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்கள் திருமுருகன், முருகன், இசக்கிவேல், ஹரிநாடார், அக்கினி ராமச்சந்திரன், இந்துராணி, மகாராஜபாண்டியன், ஜெயகுமார் ஜார்ஜ், சீனிராஜ், மாரியப்பன், முகமது சலீம், சுதாகர் பாலாஜி, பத்மராஜன், நாகூர்மீரான் பீர்முகமது, பாலமுருகன், பிரதாப் சகாயராஜ், செல்லப்பாண்டியன், சங்கரசுப்பிரமணியன், ராகவன், ராஜீவ் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொத்தம் 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் உள்பட 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனு பரிசீலனையில், அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராணயன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மற்றும் வேட்பாளர்களின் தலைமை முகவர்கள், வக்கீல்கள், சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை தொடர்ந்து அனல் பறக்கும் பிரசாரம் தொடங்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் நாங்குநேரி தொகுதிக்கு படையெடுக்க உள்ளனர். இதனால் தேர்தல் களம் விரைவில் சூடு பிடிக்க உள்ளது.


Next Story