திசையன்விளை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
திசையன்விளை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவருடைய மகன் மைக்கிள் ஜவகர் (வயது 36). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் வெளியூரில் தொழில் செய்து வந்தார். ஊரில் நடக்கும் ஆலய திருவிழாவிற்காக குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மதியம் மைக்கிள் ஜவகர் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று கொண்டு இருந்தார். நாங்குநேரி-திசையன்விளை சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மைக்கிள் ஜவகர் பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வாழைத்தோட்டம் கிராம மக்கள் திரண்டு சென்று நாங்குநேரி-திசையன்விளை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். பலியான மைக்கிள் ஜவகர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா, தாசில்தார் ஆவுடைநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான உலகரட்சகர்புரத்தை சேர்ந்த நிஷாந்த் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 4 மாதங்களில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story