நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:00 AM IST (Updated: 2 Oct 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள், குடும்பன், பண்ணாடி, கடையன், பள்ளன், காலாடி, வாதிரியார், தேவேந்திரகுலத்தான் என பல பெயர்களில் உள்ள தங்களை தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் முல்லைநகர், மருதம்நகர் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கிராம மக்கள் நேற்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், மாவட்ட செயலாளர் மருதம்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பேரவை மாநில துணை செயலாளர் எம்.சி. கார்த்திக், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் ஊர் நிர்வாகிகள் பாண்டி, முருகன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story