நீர்வரத்து குறைந்ததால் உற்சாகம்: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், சீசன் முடிந்தாலும் குற்றாலம் அருவிகளில் தொடர்ச்சியாக தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.
கடந்த 29-ந் தேதி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நேற்று முன்தினம் மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் எந்த அருவியிலும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து, அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக தடை நீக்கப்பட்டு அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் அவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அந்த அழகை ரசித்துக்கொண்டே ஆண்களும், பெண்களும் குளித்தார்கள். தற்போது பள்ளிக்கூட காலாண்டு விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதனால் அருவிகளில் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story