சிவகிரி அருகே குளிக்க சென்றபோது பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


சிவகிரி அருகே குளிக்க சென்றபோது பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சிவகிரி, 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேலகரிசல்குளம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ஜெயசிங் (வயது 9). இவன் அதே ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் கதிரேசன் (10). இவனும் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் 2 மாணவர்களும் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு அருகில் மேலகரிசல்குளத்தில் உள்ள குளத்திற்கு சென்றனர்.

அப்போது குளத்தில் தண்ணீருக்கு அருகில் ஏராளமான நண்டுகள் சென்று கொண்டிருந்தன. 2 பேரும் நண்டுகளை பிடித்துக் கொண்டு தங்களது வீட்டுக்கு சென்று சமைக்க கொடுத்தனர்.

பின்னர் குளத்தில் குளித்து விட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றனர். ஆனால், மாலை வரை 2 பேரும் வீடுகளுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த 2 பேரின் பெற்றோர்களும் குளத்துக்கு சென்று தேடி னர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் குளத்துக்கு விரைந்து சென்று தேடிப்பார்த்தனர். சிறிது நேரத்தில் இரவாகி விட்டதால், தேடும் பணியை நிறுத்தி விட்டு அனைவரும் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயசிங், கதிரேசன் ஆகியோரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்கள் 2 பேரும் குளத்தில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகிரி அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story