குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தர்ணா


குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தர்ணா
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டாகேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த மூவராயன்பாளையம் மேலூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர், தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் இடம் நத்தம் புறம்போக்கை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. தான் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், லால்குடி கோட்டாட்சியர், மண்ணச்சநல்லூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், அவர் குடியிருக்கும் இடம் நத்தம் புறம்போக்கில் உள்ளது என்று கூறி பட்டா தர அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லால்குடி நீதிமன்றத்தில் மாணிக்கம் வழக்கு தொடர்ந்தார்.

குடும்பத்துடன் தர்ணா

இந்நிலையில் நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தர்ராஜ் (திருப்பைஞ்சீலி தெற்கு), பாலாம்பிகை(வடக்கு) மற்றும் வருவாய் துறையினர், மண்ணச்சநல்லூர் போலீசார் மாணிக்கம் குடியிருக்கும் வீட்டை கையகப்படுத்துவதற்காக சென்றனர். அப்போது அதிகாரிகளுக்கும், மாணிக்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாணிக்கத்தின் மனைவி நதியா(27) தனது குழந்தைகள் 2 பேருடன் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் தனது குடும்பத்துடன் திருப்பைஞ்சீலியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், முன்அறிவிப்பின்றி தான் குடியிருக்கும் வீட்டை இடித்துத்தள்ள முயற்சி செய்யும் அதிகாரிகளின் செயலை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தர்ராஜ் மற்றும் பாலாம்பிகை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாசில்தார் ராஜேஷ்கண்ணன் இன்னும் 20 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்போனில் கூறியதையடுத்து தர்ணாவை கைவிட்டு எழுந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கிராம நிர்வாக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story