அரக்கோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள்


அரக்கோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கூடுதல் டாக்டர்களை இந்த பணியில் ஈடுபடுத்தவும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டார்.

அரக்கோணம், 

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குனர் மாலதி, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வுக்கு வந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டு, பிரசவ வார்டு, கண், அவசர சிகிச்சை, தொழு, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பிரிவுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது சில பெட்களில் கொசுவலை போடப்படாமல் இருந்தது. அங்கு கொசு வலை போட உத்தரவிட்டனர்.

மேலும் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறதா என்று டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர். டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்று மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தனர். காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். தினமும் காய்ச்சலுக்கு அதிக நோயாளிகள் வருவதை அறிந்த மருத்துவ அதிகாரிகள், அரக்கோணம் மருத்துவ அலுவலர் நிவேதிதாவிடம் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 2 டாக்டர்களை பணியில் ஈடுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார்.

பின்னர் கோப்புகளை ஆய்வு செய்து டாக்டர்கள், செவிலியர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா உள்பட டாக்டர்கள், செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story