நாமக்கல் நகராட்சியில் வீடுகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் - ஆணையாளர் சுதா எச்சரிக்கை
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சுதா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையும் மாவட்டத்தில் முடுக்கி விடப்பட்டு உள்ளது. நாமக்கல் நகராட்சியிலும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை நாமக்கல் நடராஜபுரம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் சுதா வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திறந்து வைக்கப்பட்டு உள்ள தொட்டிகள் மற்றும் டிரம்களில் கொசுப்புழு உற்பத்தி உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட தண்ணீர் கீழே ஊற்றப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சுதா நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தொட்டியை பிளச்சிங் பவுடர் கொண்டு நன்றாக கழுவவேண்டும்.
இதேபோல் வீடுகளின் அருகே தேங்காய் சிரட்டை, பாட்டில்கள், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு வரும் நகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் எந்த வீட்டில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்படுகிறதோ, அந்த வீட்டின் உரிமையாளருக்கு நகராட்சி சார்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக கொசுப்புழு உற்பத்தி இருப்பது கண்டறியபட்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரில் கொசுப்புழு உருவாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story