நாமக்கல்லில் மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில் மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்த முதலாமாண்டு நிறைவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை கலெக்டர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், திருச்சி சாலை வழியாக சென்று நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் மெகராஜ் மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவிற்கு சென்று பார்வையிட்டு, காய்ச்சல் பிரிவில் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். மேலும் கொசுவலையுடன் கூடிய படுக்கை வசதியை பார்வையிட்ட அவர், காய்ச்சல் நோயாளிகளுக்கு தரப்படும் உணவு மற்றும் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்ட மண்டல அலுவலர் ஜெயந்தி, இந்திய மருத்துவ சங்க தலைவர் ரங்கநாதன், மாவட்ட காசநோய் துணை இயக்குனர் கணபதி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story