மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் மெகராஜ் உத்தரவு
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வருவாய் துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் கிராமப்புற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைக்காலங்களில் மரங்கள் விழுந்தால் அகற்றிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்புத் துறையின் சார்பில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த ஒத்திகை நடத்த வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story