கணியம்பாடி அருகே, தொடர்மழையால் கத்தாழம்பட்டு ஏரி நிரம்பியது


கணியம்பாடி அருகே, தொடர்மழையால் கத்தாழம்பட்டு ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 2 Oct 2019 3:30 AM IST (Updated: 2 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டு ஏரி நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் கிராமமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுக்கம்பாறை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் மிதமான மழையால், விவசாய நிலங்களில் வாடிய பயிர்கள் தற்போது பச்சைப்பசேல் என காட்சியளிக்கிறது. மேலும் ஏரிகள், குளம், குட்டைகள் மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணியம்பாடி, அடுக்கம்பாறை, கீழ் அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, சோழவரம், அமிர்தி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

அமிர்தி, கீழ்அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, சோழவரம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் தொடர்மழை காரணமாக நீரூற்று ஏற்பட்டு, கால்வாய்களில் தண்ணீர் வரத்தொடங்கியது. இந்த மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், ஓடைக்கால்வாய் வழியாக கத்தாழம்பட்டு ஏரிக்கு வந்தடைகின்றன. சுமார் 100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த ஏரி கடந்த சில நாட்களாக நிரம்பி வந்ததை தொடர்ந்து, தற்போது முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்தது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கத்தாழம்பட்டு ஏரி நிரம்பி வழிந்ததை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் ஏரிகரையில் படையலிட்டு பூஜை செய்தனர். இந்த ஏரி நிரம்பியதை தொடர்ந்து வழிந்தோடும் உபரிநீர் மீண்டும் ஓடைக்கால்வாய் வழியாக கீழ்அரசம்பட்டு ஏரிக்கு செல்கிறது. பாதி நிரம்பியுள்ள கீழ்அரசம்பட்டு ஏரியும் இன்னும் சில நாட்களில் நிரம்பும் என விவசாயிகள் தெரிவித்தனர். மழைநீர் வரும் கால்வாய் அருகில் உள்ள விவசாய கிணறுகளும் நிரம்பி உள்ளது.

இதனால் கீழ்அரசம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் மழைநீர் வரும் ஓடைக்கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் தூர்ந்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளும் அதிகளவில் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story