உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் - கலெக்டர் பேட்டி
திருவண்ணாமலை மாவட்டம் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளதாக கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பழைய மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடந்தது.
இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 கிராம ஊராட்சிகள், 4,267 கிராமங்கள், குக்கிராமங்கள், 18 ஊர ாட்சி ஒன்றியங்கள், 34 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 341 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. வருகிற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஊராட்சி வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 74 ஆயிரத்து 940 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 232 வாக்காளர்களும், ஊராட்சி பகுதிகளில் 16 லட்சத்து 12 ஆயிரத்து 708 வாக்காளர்களும் உள்ளனர்.
நகராட்சிகளில் 123 வார்டுகளும், பேரூராட்சிகளில் 150 வார்டுகளும், ஊராட்சிகளில் 6,207 வார்டுகளும் என மொத்தம் 6,480 வார்டுகளும் மற்றும் நகராட்சிகளில் 257, பேரூராட்சிகளில் 164, ஊராட்சிகளில் 3,520 என மொத்தம் 3,941 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுபாட்டு கருவிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான கருவிகள் சரியாக உள்ளதா?, எவ்வளவு தேவைப்படும் என்று பார்வையிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story