மராட்டிய சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பட்னாவிஸ் போட்டி, பா.ஜனதா-சிவசேனா - வேட்பாளர் பட்டியல்
மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா தனது முதல் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஒர்லியில் ஆதித்ய தாக்கரே, சயான் கோலிவாடாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவு ரத்து நடவடிக்கையால் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு ஆகிய காரணங்களினால் பா.ஜனதா சிவசேனாவை விட அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.
ஆனால் இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என்பது சிவசேனாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது.
இதனால் பா.ஜனதா - சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. எனவே 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை போல இரண்டு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு தனியாக களம் இறங்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல், “பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டது” என்றார்.
இதன் மூலம் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் சட்டசபை தேர்தலை இணைந்து சந்திப்பது உறுதிபடுத்தப்பட்டது. இருப்பினும் இரண்டு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜனதா நேற்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
டெல்லியில் பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண் சிங் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கோத்ருட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பார்லி தொகுதியில் மறைந்த பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேயின் மகளும், மந்திரியுமான பங்கஜா முண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழர்கள் அதிகம் நிறைந்த மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தமிழரான கணேஷ்குமார் போட்டியிடுகிறார். இதனால் சயான் கோலிவாடா தொகுதியில் இரு தமிழர்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்து மந்திரி ஆனார். அவருக்கு ஷீரடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல மாற்று கட்சியில் இருந்து இணைந்த பலருக்கும் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 12 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 164 தொகுதியிலும், சிவசேனா 124 தொகுதியிலும் போட்டியிடும் என தெரிகிறது. பா.ஜனதா தனது பங்கில் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
இதேபோல பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா நேற்று தனது முதல் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதில் 70 வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
குறிப்பாக மும்பை ஒர்லி தொகுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது சிவசேனா இளைஞர் அணி தலைவராக உள்ளார். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே உயிர்வாழ்ந்த வரை அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அரசு பதவியும் வகிக்கவில்லை. இதே பாணியை உத்தவ் தாக்கரே மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் முதன் முறையாக பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து ஆதித்ய தாக்கரே தேர்தல் களம் காண்கிறார்.
ஆதித்ய தாக்கரே மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்ய தாக்கரேக்கு 27 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story