பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது நளின்குமார் கட்டீலுக்கு கிடைத்த முதல் வெற்றி - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது நளின்குமார் கட்டீலுக்கு கிடைத்த முதல் வெற்றி - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது நளின்குமார் கட்டீலுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மைசூரு, 

மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இளைஞர் தசரா விழா தொடங்கியது. முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலை தள்ளி வைப்பதற்காக நானும், நளின்குமார் கட்டீலும் சேர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அது நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அதனால் இன்று (அதாவது நேற்று) பெங்களூரு மாநகராட்சிக்கு மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.

ஒரு விதத்தில் தேர்தல் நடந்தது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இது, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றுள்ள நளின்குமார் கட்டீல் எம்.பி.க்கு கிடைத்த முதல் வெற்றி. புதிய மேயராக பா.ஜனதாவைச் சேர்ந்த கவுதம் குமாரும், துணை மேயராக ராம் மோகன் ராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தசரா விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தசரா விழாவைக் காண வந்து கொண்டிருக்கிறார்கள். தசரா விழாவின் கடைசி நாள் வரை இதேபோல் கோலாகலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பின்னர் மாலையில் இளைஞர் தசரா விழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்துகொண்டு இளைஞர் தசரா விழா மற்றும் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.


Next Story