மைசூருவில் விவசாயிகள் தசரா விழா கோலாகலம் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலம்


மைசூருவில் விவசாயிகள் தசரா விழா கோலாகலம் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் நேற்று விவசாயிகள் தசரா விழா கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்தனர்.

மைசூரு, 

மைசூருவில் தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று மைசூருவில் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்தன. மைசூரு அரண்மனை வளாகத்தில் அதிகாலையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் பல்வேறு விதமான யோகா பயிற்சிகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம் உள்பட பல்வேறு விதமான யோகா பயிற்சிகளை செய்தனர். யோகா பயிற்சியை ராமதாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மேலும் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பாரம்பரிய நடைபயணம் மைசூருவில் உள்ள மற்ற அரண்மனைகள், மன்னர் காலத்தில் கட்டப்பட்ட டவுன் ஹால் கட்டிடம், பெரிய மணிக்கூண்டு, தேவராஜ் மார்க்கெட், மாநகராட்சி கட்டிடம், காவிரி நீர் வாரிய கட்டிடம் உள்பட பல்வேறு பாரம்பரிய கட்டிடங்களுக்கு சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மைசூரு மற்றும் கர்நாடக பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய உடைகளை அணிந்து நடைபயணம் மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளும் பாரம்பரிய கட்டிடங்களை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மைசூரு ஜே.கே. மைதானத்தில் விவசாயிகள் தசரா விழாவும் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அங்கு விவசாய விளைபொருட்கள் மற்றும் கால்நடைகள் கண்காட்சி நடந்தன. மேலும் கால்நடைகளும், விவசாய விளை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக விவசாயிகள் தாங்களே தயாரித்த தின்பண்டங்கள், ஊறுகாய், வெண்ணெய், நெய் போன்ற பல விதமான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் சிறுதானியங்கள், விதைகள், உரம், விவசாயத்திற்கு வேண்டிய எந்திரங்கள் போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

காய்கறிகள், வாழைக்காய், கரும்பு, பூச்செடிகள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக விவசாயிகள் தசரா தொடக்க விழா நடந்தது. அப்போது மைசூரு அரண்மனை முன்புள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திலிருந்து நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து நடன கலைஞர்கள், நடனமாடினர். அவர்களுடன் விவசாயிகள் சிலரும் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர். அதையடுத்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் ஜே.கே.மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

விவசாயிகள் தசரா விழா இன்னும் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று(புதன்கிழமை) விவசாயிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Next Story