ரோந்து சென்றபோது மோதல்: போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் கைது


ரோந்து சென்றபோது மோதல்: போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 2 Oct 2019 5:15 AM IST (Updated: 2 Oct 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கத்தில் ரோந்து சென்ற போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர்,

புதுச்சேரி மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ்காரர் மைக்கேல் மற்றும் சிவகுரு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடிகள் அய்யனார் (வயது28), அவனது கூட்டாளிகள் ஜோசப் ராஜ், அருணாசலம், புகழ் ஆகியோர் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து செல்ல முயன்றனர்.

அதைக்கண்ட போலீசார் மைக்கேல், சிவகுரு ஆகியோர் அவர்களை விரட்டிச்சென்றனர். இதில் மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததில் ரவுடிகள் 4 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதனால் ரவுடிகள் ஆத்திரம் அடைந்து போலீஸ்காரர்களுடன் தகராறு செய்து அவர்களை தாக்கினார்கள். இதில் 2 போலீசாரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ்காரர்களை தாக்கிய ரவுடிகளை கைது செய்ய, வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த ரவுடிகள் ஜோசப் ராஜ் மற்றும் புகழ் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக பகுதியான ஆலமரத்துக்குப்பம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ரவுடிகள் ஜோசப் ராஜ் மற்றும் புகழ் ஆகிய 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை தனிப்படை போலீசார் துரத்தி சென்றபோது ரவுடி ஜோசப் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார். அதில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார் பிடித்து கைதுசெய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவருடன் தப்பி ஓட முயன்ற ரவுடி புகழையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் அய்யனார் மற்றும் அருணாசலத்தை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story