காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 2 Oct 2019 12:00 AM GMT (Updated: 1 Oct 2019 11:35 PM GMT)

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமை தாங்கினார். தேர்தல் மேற்பார்வையாளர் சுபாஷ் தும்ரே, சப்-கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல் மற்றும் இடைத்தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வீடியோ பதிவு செய்யும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் மற்றும் மதுபானம் வினியோகம் செய்வதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பறக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், அவர்களது வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Next Story