அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை


அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை
x
தினத்தந்தி 3 Oct 2019 3:30 AM IST (Updated: 2 Oct 2019 6:35 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும், என்று டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் குணசேகரன், சோமசுந்தரம் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
அப்போது கலெக்டர் பேசியதாவது:-

பருவமழை பெய்யும் சூழலில் பொதுமக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் தொற்றுநோய் பரவும். அதேபோல் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ரத்த மாதிரி எடுத்து டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, எலிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். இதேபோல் 10 படுக்கைகள் மற்றும் கொசுவலையுடன் கூடிய காய்ச்சல் வார்டு தொடங்க வேண்டும். 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர், செவிலியர் பணியில் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில், குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம். குழாய் உடைப்பு, குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும். குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், தியேட்டர்கள், உணவகங்கள், டீக்கடைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? என அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story