திண்டுக்கல், மினிபஸ் - மொபட் மோதல்: தி.மு.க. முன்னாள் நிர்வாகி உள்பட 2 பேர் பலி
தாடிக்கொம்பு அருகே மினிபஸ் - மொபட் மோதிய விபத்தில் தி.மு.க. முன்னாள் நிர்வாகி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள நவ்வாமரத்துபட்டியை சேர்ந்தவர் சேட்டு என்ற பழனிச்சாமி (வயது 70). இவர், தாடிக்கொம்பு அருகே உள்ள ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராக பதவி வகித்தார். அதே ஊரை சேர்ந்தவர் முருகன் (55).
இவர்கள் 2 பேரும், முருகனின் மகனுக்கு ஜாதகம் பார்ப்பதற்காக நவ்வாமரத்துப்பட்டியில் இருந்து தாடிக்கொம்பு வழியாக குளத்தூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். தாடிக்கொம்புவை அடுத்த காப்பிளியபட்டி நால்ரோடு அருகே மொபட் சென்று கொண்டிருந்தது.
அப்போது, விராலிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மினி பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புவதற்காக 108 ஆம்புலன்சுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆனால் தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் 108 ஆம்புலன்சு வரவில்லை. இதனால் பழனிச்சாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்குப்பதிவு செய்து முத்தனம்பட்டியை சேர்ந்த மினி பஸ் டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தார். இதற்கிடையே அப்பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story