கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்


கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் நேற்று அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி,

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்திக்கட்டம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது உருவப்படம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

மேலும், தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு கூட்டு பிரார்த்தனையும், ராட்டையில் நூல் நூற்கும் வேள்வியும் நடந்தது.

அதே சமயத்தில் காந்தி நினைவு மண்டபத்தின் அஸ்தி கட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 2–ந் தேதி அன்று அபூர்வ சூரிய ஒளி விழும். அதேபோல் நேற்று 12 மணிக்கு சூரிய ஒளி விழுந்தது. இந்த சூரியஒளியை, அங்குள்ள ஊழியர்கள் வெள்ளை துணியை விரித்து, அதில் தெளிவாக விழும்படி செய்தனர். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

மலர் தூவி மரியாதை

அரசு சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் காந்தி அஸ்திக்கட்டத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ. அசோகன், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல்அலுவலர் சத்தியதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காமராஜர் நினைவுதினத்தையொட்டி அவருடைய மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜனதா கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு காந்தி அஸ்தி கட்டத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவரும், காந்தி பேரவை நிறுவனருமான குமரி அனந்தன் காந்தி அஸ்தி கட்டத்துக்கும், காமராஜர் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் என்ஜினீயர் லட்சுமணன், நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் தம்பித்தங்கம் தலைமையில் பொருளாளர் சுரேஷ், பாலு, கோபிராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பகவதியப்பன், மணி, குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில்

இதே போல காமராஜர் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நகர செயலாளர் சந்துரு, ஜெயசீலன், ஜெயகோபால், சுகுமாரன், விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்–தே.மு.தி.க.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமுதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலாளர் மணிகண்டன், வக்கீல் பொன் செல்வராஜன் உள்பட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஜெயன்டீன், ஜெயசீலன், அனிட்டர் ஆல்வின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story