குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 3:30 AM IST (Updated: 2 Oct 2019 8:59 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்,

ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்த சாலையோரங்களில் காட்டேரி முதல் கல்லாறு வரை ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல மரங்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை ஆகும். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை செய்து வருகிறது. பருவமழை காலங்களில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அந்த சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் மின் வாள் கொண்டு மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Next Story