கிருமாம்பாக்கம் அருகே அரசு பஸ் மீது கார் மோதல்; என்ஜினீயர் உடல் நசுங்கி பலி


கிருமாம்பாக்கம் அருகே அரசு பஸ் மீது கார் மோதல்; என்ஜினீயர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 3 Oct 2019 4:45 AM IST (Updated: 3 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக வந்த என்ஜினீயர் உடல் நசுங்கி பலியானார்.

பாகூர்,

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த சத்திரம் பாடியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 29). என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபர்மதி புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த சபர்மதி, குழந்தையுடன் இங்கேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தரங்கம்பாடி சென்ற பத்மநாபன், மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை தரங்கம்பாடியில் இருந்து காரில் புதுவைக்கு வந்தார். அவரே காரை ஓட்டிவந்தார். கடலூர் - புதுச்சேரி சாலையில் கிருமாம்பாக்கம் அருகே காலை 6.30 மணியளவில் வந்தபோது முன்னால் லாரி ஒன்று சென்றது.

ரோட்டின் குறுக்கே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு கட்டை வைக்கப்பட்டு இருந்தது. அதை லாரி கடந்து சென்றது. சாலையில் தடுப்புக்கட்டை இருப்பதை பத்மநாபன் சரியாக கவனிக்கவில்லை. இதன் மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்த ஓடியது. அப்போது எதிரே புதுச்சேரியில் இருந்து நாகைக்கு சென்ற அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் பஸ்சுக்கு அடியில் சொருகியபடி சுமார் 100 அடி தூரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ் மோதியதில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்து போனது.

தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை சுமார் 2 மணிநேரம் போராடி கிரேன் உதவியுடன் மீட்டனர். காரின் இருக்கையில் பத்மநாபன் தலை, உடல் நசுங்கிய நிலையில் பிணமாக இருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பஸ் - கார் மோதிய விபத்தில் பஸ்சில் பயணம் செய்த புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த முருகன் (50), சுந்தர் (32) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக புதுச்சேரி - கடலூர் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story